தையிட்டியை இடிக்க வாரீர்: வெளியான போலிச்செய்தி
யாழ். (Jaffna) தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என குறிப்பிட்டு கஜேந்திரகுமார், பெயர் உள்ளடக்கப்பட்டு வெளியான செய்தி போலியானது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக கணக்கில் பகிர்ந்துள்ளார்.
எதிர்வரும் 08ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். தையிட்டி விகாரையை இடிக்க வருமாறு கோரி துண்டுபிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முகப்புத்தக பதிவு
குறித்த துண்டுபிரசுரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த விளம்பரத்தில், சிங்கள ஆக்கிரமிப்பின் சின்னமாய் விளங்கும் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், விகாரையை இடிக்க வருபவர்கள், அலவாங்கு, பிக்கான், மண்வெட்டி போன்ற ஆயுதங்களை தாங்கி வாருங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது தலைமையில் முன்னெடுக்கப்பவுள்ளதாக கூறும் குறித்த தகவல் போலியானது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |