கஜேந்திரகுமாருடைய குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்! சிவசக்தி ஆனந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பிரச்சினையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் விமர்சித்து ஏனைய தரப்புக்களையும் விமர்சித்து கொண்டு தமிழ் தேசியத்துக்குள் ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளரும், ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி 13ஐ எதிர்த்து பேரணியொன்றைச் செய்து பிரகடனத்தை வெளியிட்டுள்ளமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கஜேந்திரகுமார் போராட்டத்தை நடாத்தியிருக்கின்றார். அதில் பிரகடனமும் வெளியிடப்பட்டிருக்கின்றது. நாங்கள் 13ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு கடிதம் அனுப்பியதாக பிரகடனம் மற்றும் பேரணி சொல்கிறது.
மக்களுக்காக பேரணிகளை அல்லது பிரகடனங்களை செய்வதை நான் விமர்சிக்கவில்லை. அது மக்கள் ஆணை பெற்ற அரசியல் கட்சி ஒன்றின் கடமை. அதை அவர்கள் நகர்த்த வேண்டும். அவர்களின் கொள்கையின் பால் அவர்கள் செயற்பட வேண்டும்.
ஆனால் கஜேந்திரகுமாருடைய குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவருக்கிருக்கின்ற பிரச்சினையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் விமர்சித்து ஏனைய தரப்புக்களையும் விமர்சித்து கொண்டு தமிழ் தேசியத்துக்குள் ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றார்கள். அவர்கள் இன்று 13ஆவது திருத்த சட்டம் வேண்டாம் என்று சொல்வதும் நாங்கள் 13இற்குள் சென்றுவிட்டோம் என்று பொய்பிரசாரம் செய்வதும் மறைமுகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வடக்கில் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
ராஜபக்ஷக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. மகாணசபைகள் வெள்ளை யானைகள் எந்தவொரு அதிகாரப்பகிர்வும் கிடையாது ஒரே நாடு ஒரே சட்டம் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஆகவே ராஜபக்ஷ சொல்வதைத்தான் இவர்களும் கூறுகிறார்கள். ஆகவே இங்கு போராட்டம் மக்களுக்கான அபிலாஷைகளை வென்று கொடுப்பதற்காக மக்களை மீள எழுச்சிக்கு உட்படுத்தியிருக்கின்றது என்று கூறினாலும் அதற்கு அப்பால் இவர்கள் ராஜபக்ஷக்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்களா?என்ற கேள்வியொன்று இயல்பாக எழுகின்றது. அவர்களுடைய செயற்பாடுகளும் அவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களும் ராஜபக்ஷ தெரிவிக்கின்ற கருத்துக்களும் செயற்பாடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதால் எங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது.
அதேநேரத்தில் இந்திய,இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக கஜேந்திரகுமார் கூறுகின்றார். 13ஆவது திருத்தச் சட்டம் ஒற்றை ஆட்சிக்குள் இருப்பதாகவும், அதை நிராகரிப்பதாவும் அவர் கூறுகிறார்.
ஆனால் மாகாண சபை தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறுகின்றார். இது எத்தனை முரண்நகை. இந்தியஇ இலங்கை ஒப்பந்தத்தால் தான் 13ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது.
13ஆவது திருத்த சட்டத்தால் தான்
மாகாணசபை உருவாக்கபட்டன. ஆகவே 13ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு காரணமான
விடயத்தையும் 13ஆல் உருவாகிய விடயத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் 13ஐ
நிராகரிப்பதாக சொல்வது ஒரு வேடிக்கையான கதை என தெரிவித்துள்ளார்.