நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது விவகாரம்!அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அவசர கடிதம்
அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனைய தமிழ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென்னிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) மனித உரிமைகள் அமைச்சினால் செயலாளர் பிளிங்கனுக்கு அனுப்பப்பட்ட கூட்டு கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக செயற்பாடுகள்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரோத செயற்பாடுகளை நிவர்த்தி செய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்துக் கோயில்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதும், அதைத் தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் புத்த கோயில்களைக் கட்டுவதுமாக இலங்கை பாதுகாப்புப் படையினரின் தீவிர ஆதரவுடனும் பாதுகாப்புடனும் எமக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது, இலங்கை பொலிஸார் அவர்களைத் துன்புறுத்தி நான்கு பெண்கள் உட்பட ஒன்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அரசியல் கட்சியின் சட்ட ஆலோசகர் சுஹாஷ் கனகரத்தினம் ஆகியோரைக் கைது செய்தது. இவ்வாறு அரசியல் கட்சி உட்பட தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறையாமல் தொடர்கின்றன.
எனவே "கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜதந்திரிகளை அனுப்பி, இந்த விசாரணைகளை அவதானிப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஆறு தமிழ் சங்கங்கள் கூட்டாக கையொப்பமிட்டு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |