இந்தியத் தூதுவருடன் கஜேந்திரகுமார் தரப்பு சந்திப்பு - சர்வதேச விசாரணைக்கும் வலியுறுத்து
தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும். அத்துடன், சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால், அதன் வழியான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்க முடியாது .தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வைத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனவும் , இந்தியத்தூதுவரிடம் தான் தெரிவித்ததாகவும் கஜேந்திரகுமார் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும். நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். பூகோள அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கின்றோம் எனவும் இந்தியத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார். அதன் ஓர் அங்கமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்தியத்தூதுவர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.