ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு
அண்மையில் ஆட்சிப்பீட மேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப் போவதாக தேர்தல் பிரசாரங்களில் கூறியதின் காரணத்தால் இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன்(Gnanamuththu Srineshan), தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதி பயங்கரமானது.அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது.
15 ஆண்டுகள்
பல அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது. அப்பாவிகளின் உயிர்களையும் குடித்தது.
அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்காக சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு உதவியது.
பல தமிழர்களை நடைப் பிணங்களாக மாற்றியது. மனிதகுலம் வெட்கித் தலை குனியக் கூடிய அனைத்துக் கொடூரங்களையும் அச்சட்டம் செய்தது. இப்படியான கொடூரச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டது.
ஆனால், 45 ஆண்டுகளாக நிலையாக நிற்கின்றது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் அந்த சட்டத்தை நீக்க அதிகார வர்க்கத்தால் முடியவில்லை.
அதனைச் செய்யாது தவிர்த்தால்,பச்சை,நீலக் கட்சிகளின் பாதைகளில் பயணிக்கும் கட்சியாகவே சிவப்புக்கட்சியும் அமைந்துவிடும். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,பொதுசனப் பெரமுன போன்ற கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
இதனை உணர்ந்து தேசியமக்கள் சக்தி செயற்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கியே சென்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டம்
இதனை தேசிய மக்கள் சக்தி புரியாது விட்டால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜேவிபியினரின் உயிர்களையும் குடித்திருந்தது என்பதை தேசிய மக்கள் சக்தி நன்கறியும்.
அதிகார இருப்பால் அதனை மறக்க முடியாது.மறைந்த உறவுகளையும் நினைவேந்தத் தடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை உரிமைக்கு விரோதமானதாகும்.
அண்மையில் நினைவேந்தல் செயலால் மூன்று தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதையில் சறுக்கல் ஏற்படக்கூடாது. கைதானவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |