நிதியை முறையாகச் செலவிட அரசுக்கு இயலாது..! நாட்டின் அபிவிருத்தி குறித்து ஜி.எல். பீரிஸ் அதிருப்தி
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லை என ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிதியை செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லாத காரணத்தினால் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினை நிதி ஒதுக்கீடு செய்வதில் அல்ல. மாறாக, ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான இயலுமை அரசிடம் இல்லாமையே பிரதான பிரச்சினையாகும்.
செலவினங்கள் குறையும் அபாயம்
உலக வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் 16.7 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருட இறுதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரையான தொகையை மாத்திரமே அரசால் செலவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான குறைந்தளவிலான நிதிப் பயன்பாட்டின் மூலம் அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைந்துகொள்ள முடியாது.
அத்துடன், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய துறைகளுக்கான நிதிச் செலவினங்கள் அதிகரிக்கப்படுவதில்லை என்பதுடன், ஏற்கனவே நடைமுறையிலுள்ள செலவினங்களும் குறைவடையும் போக்கே காணப்படுகின்றது என்றார்.