ரணில் வரும் வரை காத்திருக்கும் இரண்டு கட்சிகளின் எதிர்கால அரசியல்
தற்போது ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதே தங்கள் உடனடி முன்னுரிமை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இந்தநிலையில், ஒற்றுமைப் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும், மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடும் சாத்தியக்கூறுகளில் இரண்டு கட்சிகளும் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம்
இதன்படி, சில பகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சி சின்னத்திலும், மற்ற பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்திலும் போட்டியிடுவது குறித்து விவாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் குறித்து முடிவெடுக்க நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுவதற்கு முன்னர், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து விளக்குவதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்புவதை எதிர்பார்த்திருப்பதாக தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை இரண்டு கட்சிகளுக்கும் இடையே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்திப்புக்களின் முன்னேற்றம் குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் மற்றும் நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)