வடக்கில் மேலும் 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்குக் கோவிட் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் 292 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இவர்களில் 6 பேருக்குத் தொற்று உள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவர்களில் 5 பேர், நவாலியில் தொற்றாளராகக் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மூவர் ஆசிரியையின் குடும்ப உறுப்பினர்கள். இருவர் ஆசிரியையுடன் முல்லைத்தீவுக்குச் சென்று வரும் சக ஆசிரியர்கள்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்தவர் என்றார்.