இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! - கண்ணீருடன் விடை கொடுத்த அரச குடும்பத்தினர்
பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிபின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கோவிட் - 19 பரவல் காரணமாக பொது மக்களின் அஞ்சலி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் இறுதிச் சடங்கு இடம்பெற்றிருந்து.
வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில், சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். பிரிட்டன் அரசின் சார்பில் முழு இராணுவ மரியாதையுடன், இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எடின்பெரோ கோமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக, இங்கிலாந்து முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில், ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.