மைதான புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட நிதி: மாங்குள மைதானமொன்றின் இன்றைய நிலை
முல்லைத்தீவு - மாங்குளத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றின் புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நலன் சார்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விளையாட்டுக்கு பயன்படுத்தப்படாது இன்று பற்றைக்காடுகளாக காணப்படும் மைதானம் அன்று 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சரிவரத் திட்டமிடப்பட்டிருக்கவில்லையா? என்ற கேள்வி அவர்களிடம் எழுப்பியிருந்தது.
மாங்குளம் சந்தியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய திசையில் 2 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் இந்த மைதானம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு இரும்பிலான பிரதான வாயில் கதவும் போடப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
நீண்ட நாட்களாக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தடயங்கள் எவையுமின்றி இருப்பதினை அந்த மைதானத்தில் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில், எதற்காக மைதானத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது என ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
பொருளாதார நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதியினை பயன்படுத்துவதை விட்டு பகிர்ந்தளிக்கும் போது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பாக இதனை நோக்க வேண்டியுள்ளது.
பயன்பாடு மிக்க ஒரு இடத்திற்கே மின்விளக்குகள் அவசியமாகும் என்பது கூட இங்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு என்ற அமைச்சின் செயற்பாட்டுக்கமைய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் - 2019 இற்கேற்ப இந்த நிதி பரிந்துரைத்து வழங்கப்பட்டுள்ளது.
கருத்திட்டமாக பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பு வேலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாங்குளம் கிராம சேவகர் பிரிவினுள் இந்த பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மொத்த மதிப்பீட்டுச் செலவாக ரூபா 990 000 (ஒன்பது இலட்சத்து தொண்னூறாயிரம் மட்டும்) குறித்தொதுக்கப்பட்டு உள்ளதும் நோக்கத்தக்கது.
பத்து இலட்சம் ரூபா நிதியினைக் கொண்டு புனரமைக்கப்பட்ட மைதானத்தில் முன்பக்க மதிலும் இரும்புக் கதவும் இரவு விளையாட்டுக்களை மேற்கொள்வதற்கென மின் விளக்குத் தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் பகல் பொழுதில் கூட விளையாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத ஒரு விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி எப்படி அந்த கிராமம் சார்ந்த சமூகத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தி விடப்போகின்றது?
இப்படி பொருளாதார நோக்கிலான கேள்விக்கு உரிய தரப்பினர் விடைகளைத் தேடும் போது எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போகும் அபிவிருத்திச் செயற்பாடுகளையாவது நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு தங்கள் திட்டமிடல்களைச் செய்ய முடியும் என சமூக விடய ஆய்வாளர் வரதனிடம் இந்த மைதானத்தின் இன்றைய நிலை தொடர்பில் சுட்டிக்காட்டி அவரது கருத்துக்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார்.
மாங்குளம் மகாவித்தியாலய மைதானம்
A9 வீதியின் கிழக்குப் பக்கத்தில் மாங்குளத்தில் அமைந்துள்ள மாங்குளம் மகாவித்தியாலயத்தின் மைதானத்தினை புனரமைப்புச் செய்வதற்கு இந்த நிதியினை பயன்படுத்தியிருக்கலாம் என மாங்குளத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் மேற்கொண்ட கேட்டல்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும் அது பாடசாலை மைதானம் என்ற ஒரு காரணத்தினாலேயே அந்த முயற்சி பற்றி சிந்திக்காது விட்டுள்ளனர்.
அதிக பயன்பாடுமிக்க மைதானமாக மாங்குளம் மகாவித்தியாலய மைதானம் இருப்பதையும் கிராமத்தின் கட்டமைப்புகள் சார்ந்து பிரதான வீதியில் உள்ள மாங்குளம் பாடசாலை மைதானத்தின் புனரமைப்பு உடனடி மாற்றங்களை மாங்குளம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பது நிதர்சனம்.
ஒரு கிராமத்தின் நலன் சார்பாக மேற்கொள்ளப்படும் நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கிராமத்தின் அமைவிடம் தொடர்பிலும் பயன்பாட்டு முக்கியத்துவம் தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
பயன்பாட்டுக்கும் பராமரிப்புக்கும்
2019 ஆம் ஆண்டில் புனரமைப்புக்குட்பட்ட மாங்குளம் பொது மைதானத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்களை மக்கள் பயன்பாட்டுக்கும் மீண்டும் கொண்டுவரும் போது அது பேணப்பட்டு வரும் என்பது திண்ணம்.
மெல்ல மெல்ல நடந்தேறும் சிறு மாற்றங்கள் கூட தொடர்ச்சியானதாகும் போது முழுமைக்கும் பயன்பாடுமிக்க ஒரு கட்டமைப்பாக அது மாறிப்போகும்.
இந்த மைதானம் சார்ந்த விளையாட்டுக் கழகத்தினர் தொடர்பாக உரிய முறையிலான தொடர்புகள் கிடைக்கப் பெறவில்லை. இலகுவில் அணுக முடியாத நிலைமையும் கூட அந்த விளையாட்டுக் கழகத்தின் எழுச்சிக்கு தடையாக அமையும் ஒரு காரணி.
தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அதற்கு பொருத்தமான எதிர்வினையாற்று கையாக அந்த தவறுகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பொருத்தமான மாற்றங்கள் தவறுகளற்ற வளர்ச்சி நோக்கிய திசையில் பயன்பட உதவும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.