உக்ரேனியர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் திட்டம்: முதல்நாளிலேயே அதிகப்படியான நன்கொடை
உக்ரைன் - ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையில் உக்ரைனிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவும் முகமாக, பிரித்தானியப் பேரிடர் அவசரக் குழு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க நிதி திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு முதல் நாளிலேயே 55 மில்லியன் பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரித்தானிய ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் டியூக் ஆகியோரும் நன்கொடை வழங்கியதாகவும் அந்த நன்கொடையும் இதில் அடங்கும் எனவும் பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நடவடிக்கை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இலட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்தமுயற்சிக்குப் பங்களிப்பு செய்துள்ளனர்.
மேலும் பிரித்தானிய அரசாங்கம் அதன் யு.கே எயிட் மேட்ச் திட்டத்தின் ஒரு பகுதியாக நன்கொடையாக வழங்கிய 20 மில்லியன் பவுண்டுகளும் இதில் அடங்கும்.
மேலும் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஒக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட 15 பிரித்தானிய உதவி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் நிதி சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.