யாழில் அநுரவின் பெயரை பயன்படுத்தி நிதிசேகரிப்பு: இருவர் கைது
யாழ். நெல்லியடி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நெல்லியடி நகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, நிதி கொடுக்க மறுத்தவர்களை அநுரவின் ஒளிப்படத்தைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
இதன்போது, வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசார மேடைகளில் தோன்றியவர்
இதனையடுத்து, அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த பின் விடுவித்துள்ளனர்.
நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு கோரி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |