எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கவலை
இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து சமூகங்களினதும் நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படைப் பொறுப்பாகும்.
இருப்பினும், அண்மையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.
விகிதாசார அடிப்படை
ஊடகங்களுக்கு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறான ஆணைக்குழுக்களை நியமிக்கும் போது, நாட்டின் மூவின சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்தை விகிதாசார அடிப்படையில் பேணி வந்த வரலாறு இங்கு குறிப்பிடத்தக்கது.

"இன, மத பாகுபாடற்ற ஆட்சி மாற்றம்", "வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற முழக்கங்களுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமனத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை குறித்து வினவியபோது வழங்கிய விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
"துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களே நியமிக்கப்பட வேண்டும்; அதற்கான தகுதி தராதரங்கள் புள்ளி அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு முறையான வழிமுறையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் தரப்பில் கூறப்படும் பதிலானது, மறைமுகமாக "முஸ்லிம் சமூகத்தில் இப்பதவிக்குத் தகுதியானவர்கள் இல்லை" என்று சொல்வது போல் அமைந்துள்ளது.
சிறுபான்மைச் சமூகம்
அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களுக்கும் — அனைத்து மட்டங்களிலும் "தகுதி" மற்றும் "துறை சார் தொழில்நுட்ப அறிவு" என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது நியாயமான ஒன்றா? அரச உயர் பதவிகளுக்கும் தொழில்நுட்பக் குழுக்களுக்கும் பங்களிப்பு செய்யக்கூடிய தகுதியும் ஆளுமையும் மிக்க பல புத்திஜீவிகளும் நிபுணர்களும் முஸ்லிம் சமூகத்தில் அங்கம் வகிக்கும் சூழலில், இத்தகைய நியாயங்கள் முன்வைக்கப்படுவது எமது பிரதிநிதித்துவ உரிமையை அப்பட்டமாக மறுக்கும் செயலாகும்.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அரசு, தகுதி என்ற காரணியைச் சாட்டாக வைத்து எமது சமூகத்தைப் புறக்கணிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இக்கட்டான இந்த வரலாற்றுச் சூழலில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூகச் சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து, எமது சமூகத்தின் நியாயமான பிரதிநிதித்துவ உரிமைகளை வென்றெடுக்கச் சாதுரியமாகவும் தீவிரமாகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.