சுகாதார துறைக்கு நிதி ஒதுக்கீடு.. ஏனைய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் ரத்து
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காக, ஏனைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடக பேச்சாளர் ரமேஸ் பத்திரன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கம்
அதற்கமைய, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி வேலைத்திட்டத்திலிருந்து 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்சரிவு இடர்களை குறைப்பதற்கான வேலைத்திட்டத்திலிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சுகாதார அமைச்சின் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.