நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் (Photos)
நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கியூ.ஆர் அட்டை முறையைப் பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் இருப்புகளிலிருந்து QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்பட்டு எதிர்காலத்தில் விநியோகம் இடம்பெறும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர் அட்டை முறைப்படி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை இன்று(01) அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! விலை குறையலாம் என தகவல் |
மேலும் எரிபொருளுக்காக முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தந்தப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையங்களில் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கேற்ப இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முச்சக்கர வண்டிகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி - கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை நேற்று(31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று(1) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயம் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகஸ்த்தர்களுக்கும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஏனைய திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: யது
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று(01) முதல் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தகவல்களுக்கு அமைவாக இதுவரையில் தினமும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட மேலதிகமாக 5 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, வடமராட்சி, சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளில் மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு 6600 லீட்டர் பெட்ரோல் தினமும் மேலதிகமாக விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ராகேஷ்
புத்தளம்
புத்தளம் மாவட்ட எரிபொருள் நிலையத்தில் இன்று(01) முதல் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகளின் கண்காணிப்பால் எரிபொருள் விநியோக செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் அட்டை முறைமையின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இன்றும் மோட்டார்
சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் மிக நீண்டவரிசைகளில்
நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி: அசர்