QR முறையால் நெருக்கடியில் மக்கள்.. கடும் விமர்சனத்திற்குள்ளாகும் அநுர அரசாங்கம்
இலங்கை அரசாங்கம், நேற்று காலை முதல் மீண்டும் எரிபொருள் QR முறையை நடைமுறைபடுத்தியது.
இதனால் சமூக ஊடகங்களில், குறிப்பாக Twitter தளத்தில், இந்த முறையின் அவசியம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
2022 ஒகஸ்டில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட தளத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் ஏற்பட்ட கடுமையான தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்தும் பரவலான கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
பொதுமக்களின் மனநிலையை விரிவாகப் புரிந்துகொள்ள, ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பிரதான எதிர்வினை
இதன்படி, QR முறை மீண்டும் அறிமுகமானதும், ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்களில் பெரும்பாலானவை மனவேதனை மற்றும் விரக்தி கலந்தவையாக இருந்ததாக குறித்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் ஒதுக்கீடு தேவையான ஒன்றாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், அரசாங்கம் அதை செயல்படுத்திய விதம் குறித்து கடுமையான அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கருத்துகளில், National Fuel Pass இணையதளம் செயல்படவில்லை, புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியவில்லை, OTP குறியீடுகள் இரண்டு நிமிட காலவரம்பு முடிந்தபின் மட்டுமே கிடைக்கின்றன, மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது என கூறப்பட்டது.
கடும் விமர்சனம்
“Registration to Fuel Pass has not started yet. It will be available soon!” என்ற அறிவிப்பு ஸ்கிரீன்ஷாட் செய்து பகிரப்பட்டு, அதனுடன் கடும் விமர்சனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 6 மணிக்கு பதிவு செய்யலாம் என அரசு அறிவித்த போதிலும், மதியம் வரை முறை செயல்படாதது பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை நோக்கிய விமர்சனங்களும் கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களை சுட்டிக்காட்டி முன்பு விமர்சித்த அதே QR முறையை தற்போது அரசாங்கம் மீண்டும் கொண்டு வந்துள்ளது என்ற குற்றச்சாட்டு அதிகமாக முன்வைக்கப்பட்டதாக அக்கட்டுரை குறிப்பிடுகின்றது.
இது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தியையும் விரக்தியையும் அதிகரிக்குமு் வகையில் இருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.