காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
காசா – இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்துள்ள யுத்த சூழ்நிலையின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணிப்புரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயம் தொடர்பான பணிப்புரைகளை அண்மையில் வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) தகவல் வெளியிட்டுள்ளது.
எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் தற்போது எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இந்நிலையில் சினோபெக் இலங்கையிலும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தை எந்தவித நெருக்கடியும் இன்றி பராமரிக்க முடியும் என CEYPETCO மேலும் வலியுறுத்தியுள்ளது.
QR குறியீட்டு முறை
இருந்தபோதிலும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையின் தாக்கத்தினால் ஏதேனும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குரிய எரிபொருள் மேலாண்மை முறைகள் அறிவிக்கப்படும் என்று CEYPETCO தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மற்றும் CEYPETCO நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளை இரண்டு மாதங்களுக்கு பிறகு எவ்வாறு பாதுகாப்பது என்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.
மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால், முந்தைய QR குறியீட்டு முறை மீண்டும் தொடங்கப்படுமா அல்லது மற்றொரு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தீர்மானிப்பதில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.