வாக்கெடுப்புக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களில் எரிபொருள்
நாடாளுமன்றத்திற்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் வசித்து வரும் பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வழிமுறைகள் இல்லாமல் இருப்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு முறைப்பாடு செய்தமைக்கு அமைய இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

இதனிடையே புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள நாடாளுமன்றத்திற்கு வரும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி,முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களை விடுத்து வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அருகில் பாதுகாப்பு இரு மடங்காக அதிகரிப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதன் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இரண்டு மடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதி பாதுகாப்பு காரணங்களால் முற்றாக மூடப்பட்டுள்ளது. அந்த வீதி பகுதியில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வீதி வழியாக பயணிக்க முடியும்.
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் இராணுவத்தின் சிறப்பு கனரக வாகனங்கள் நேற்று நிறுத்தப்பட்டிருந்தன.
நாடாளுமன்றத்திற்கு விருந்தினர்கள் வருவது பாதுகாப்பு நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொது மக்களுக்கான கெலரியும் மூடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஊடகவியலாளர்களுக்காக புதிய ஆலோசனைகளை படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ நேற்று வெளியிட்டுள்ளார்.