அமைச்சர்களின் எரிபொருள் மோசடி! அம்பலப்படுத்தும் காவிந்த ஜயவர்த்தன
அரசாங்கத்தின் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் மோசடியான முறையில் எரிபொருள் வசதிகளைப் பெற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுக்குரிய எரிபொருள் கோட்டாவை மாத்திரமே பயன்படுத்தினர்.
வசந்த சமரசிங்க முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கோட்டாவை அமைச்சர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிக்கான எரிபொருள் கோட்டா மட்டுமன்றி தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான எரிபொருள் கோட்டாக்களையும் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்கின்றனர்.
அதன் மூலமாக பொதுச் சொத்துக்களை மோசடி செய்து வருகின்றனர். இவ்வாறு மோசடியான முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர்களின் வரிசையில் அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலை வகிக்கின்றார்.
கோடிக்கணக்கான சொத்துக்களையும் வைத்துக் கொண்டு, அரசாங்கத்திடம் இருந்து மோசடியாக எரிபொருளையும் பெற்றுக் கொண்டு, மறுபுறத்தில் சாதாரண கட்சிக்காரர்களிடம் இருந்தும் எரிபொருள் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்வது குறித்து அவர் வெட்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.



