நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:வெளியான தகவல்
நாட்டின் எரிபொருள் தேவை குறித்து இலங்கை பெட்ரோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், வருட இறுதிக்குள், நாட்டில் எரிபொருள் தேவை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவை
இந்த வருடத்தின் முதற் பாதியில் மாதம் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை இருந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அது இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், தினசரி டீசல் நுகர்வு ஆறாயிரத்து நானூறு மெட்ரிக் தொன்னில் இருந்து இரண்டாயிரத்து இருநூறாகக் குறைந்துள்ளது.
காரணங்கள்
பெட்ரோல் நுகர்வும் மூவாயிரத்து எழுநூறிலிருந்து ஆயிரத்து இருநூறு மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எரிபொருள் தேவை குறைவடைந்தமைக்கு, பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைக்கப்பட்டமை, கியூ.ஆர் அமைப்புக்கு மட்டுமே எரிபொருள் வெளியிடப்பட்டமை, எரிபொருள் இருப்புகளை சேமிக்க நுகர்வோர் செயற்படாமை என்பன காரணமாக அமைவதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.