கட்டார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதா: சிங்கள பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையை பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி, நாமல் ராஜபபக்ச என்பவர் நிதிப்பணிப்பாளராக பதவி வகிக்கும் ALBG என்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்க முன்னெடுக்கப்பட்டு வரும் மோசடியான வேலைத்திட்டம் தொடர்பில் ஜூலை 3 ஆம் திகதி ஞாயிறு லங்காதீப பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச அதிகாரிகளுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்டார் நாட்டின் வர்த்தகர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடும் புகைப்படங்களை குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் இருந்து எடுத்து செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவை தவிர அஜித் நிவாட் கப்ரால் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டார் அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் புகைப்படங்கள் அந்த இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மின்னஞ்சலுக்கு பதிலளிக்காத நிறுவனம்
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் நாமல் ராஜபக்ச என்ற நபர் நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது வேறு ஒரு நபரா என அறிய நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் லங்காதீப செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Once again an old message is being circulated on social media falsely claiming that I am part of a trading company in Qatar. I have no such affiliation & categorically deny this! This person maybe having a similar name to me but is most definitely not me! https://t.co/u8NH631zr8 pic.twitter.com/CkPlFaZgp2
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 29, 2022
எவ்வாறாயினும் கட்டார் நிறுவனத்தில் நிதிப்பணிப்பாளராக இருக்கும் நாமல் ராஜபக்ச என்ற நபர் தான் இல்லை எனவும் அதனை முற்றாக மறுப்பதாகவும் அவர் ஒரே பெயரை கொண்ட வேறு நபர் எனவும் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.