நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு : மக்கள் பெரும் பாதிப்பு (Photos)
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பெருமளவான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நகருக்குள் அன்றாட தேவைக்கு வருவோரும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அண்மைக்காலமாக நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் எரிவாயு தட்டுப்பாடு மிக மோசமான தாக்கத்தினை செலுத்திவருகின்றது.
மட்டக்களப்பு மாநகரில் உள்ள உணவகங்களில் எரிவாயு இல்லாத காரணத்தினால் மூடப்படுவதாக பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் முக்கிய திணைக்களங்களங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ள நிலையில் உணவகங்களை நம்பி கடமைக்கு வருவோர் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செய்தி: குமார்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினால் உணவகங்களின் நாட் கூலியாக வேலை செய்யும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகளவானவர்கள் வேலை செய்து வருகின்ற நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வீடுகளில் எரிவாயு பயன்படுத்தும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன் மண்ணெண்ணை கொள்வனவுக்காக நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை மன்னாரில் நிலவி வருகிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக கிராமங்களுக்குள் பயணம் செய்யும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தூர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்
யாழ்ப்பாணம்
பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
எனவே எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
இன்று காலை 10:30 மணி முதல் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.