பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: மரின் லெ பென் போட்டியிட மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லெ பென், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(07.07.2026) வழங்கியுள்ளது.
அதேவேளையில், அவர் மின்னணு காப்பு அணிய வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளது.
மரின் லெ பென் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு
ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஆண்டு கீழ் நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடையும், சிறைத்தண்டனையும் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து மரின் லெ பென் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அவர் பொதுப்பணத்தை முறைகேடு செய்தது உண்மைதான் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எனினும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைக்காலத்தை 45 மாதங்களாகக் குறைத்துள்ளது. இதில் 30 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தத் தடைக்காலம் கணக்கிடப்படுவதால், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே அவரது தடைக்காலம் முடிவுக்கு வந்துவிடும்.
மின்னணு காப்பு நிபந்தனை
இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமாகியுள்ளது. ஆயினும், நீதிமன்றம் அவருக்கு வழங்கிய 3 ஆண்டு சிறைத்தண்டனையில், ஒரு ஆண்டு காலத்தை அவர் தனது வீட்டில் இருந்தபடி மின்னணு காப்பு அணிந்து கழிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
"ஒரு ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும்போது எங்கும் சுதந்திரமாகச் செல்லக்கூடிய நிலை இருக்க வேண்டும், ஒரு நீதிபதியின் அனுமதிக்குக் காத்திருக்க முடியாது" என மரின் லெ பென் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதனால், இந்த மின்னணு காப்பு நிபந்தனையோடு அவரால் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை அவரால் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தனது 'தேசிய அணி' கட்சியின் தலைவரான 30 வயது ஜோர்டான் பர்டெல்லாவிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam