ரஷ்ய எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சிறைபிடித்து அதிரடி காட்டிய பிரெஞ்சு கடற்படை
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டுக்கு மேற்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேசத் தடைகளுக்கு உள்ளான 'தாகூர்' என்ற ரஷ்ய தொடர்புடைய எண்ணெய் கப்பலை பிரெஞ்சு கடற்படையினர் அதிரடியாகச் சிறைபிடித்துள்ளனர்.
இந்தச் சிறைபிடிப்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளையும் பிரெஞ்சு கடற்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நடுக்கடலில் சிறைபிடிப்பு
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது ஒரு "சட்டவிரோதமான செயல்" என்றும், சர்வதேசக் கடல் கொள்ளைக்கு ஒப்பானது என்றும் கிரெம்ளின் மாளிகை சாடியுள்ளது.
இதற்கிடையில், பாரிஸில் உள்ள ரஷ்ய தூதரகம், சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த தங்களது நாட்டு மாலுமிகள் மற்றும் குடிமக்களின் நிலை குறித்த முழுமையான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.