நிலக்கரி ஊழலினால் 8,400 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நட்டம்!
நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்த பாரிய ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 போலி அறிக்கைகள் மற்றும் தர மோசடி நிலக்கரி ஏற்றப்பட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களிலிருந்து வழங்கப்பட்ட தரப்பரிசோதனை அறிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலக்கரி தரம் வாய்ந்தது எனத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்ட 15 அறிக்கைகளில் 11 அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகள் தங்களுடையவை அல்ல என நிராகரித்துள்ளனர்.
இதன் மூலம், தரம் குறைந்த நிலக்கரியைத் தரம் கூடியதாகக் காட்டி இலங்கைக்கு அனுப்புவதற்காக யாரோ ஒரு தரப்பினர் இந்த போலி அறிக்கைகளை தயாரித்துள்ளமை குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, முதல் 9 கப்பல்களில் மட்டும் இலங்கைக்குச் சுமார் 8,497 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
3-வது கப்பலின் மூலம் 1,318 மில்லியன் ரூபாய் நட்டம், 6-வது கப்பலின் மூலம் 1,182 மில்லியன் ரூபாய் நட்டம் மற்றும் 9-வது கப்பலின் மூலம் 1,493 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறியியலாளர் சமீர அதிகாரிகே வழங்கிய அறிக்கையின் ஊடாக இந்த நிதியிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மின்நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் லக்விஜய மின்நிலையத்தின் இயந்திரத் தொகுதிகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
இது மின்நிலையத்தின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் அதன் ஆயுட்காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 மில்லிமீட்டருக்கும் குறைவான நிலக்கரித் துகள்கள் மின் உற்பத்திக்குப் பயன்படாமல் வெறும் சாம்பலாகவே மாறி விடுவதாகவும், இது தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாகவும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழு உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல்நீதிமன்ற நீதிதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஒட்டுமொத்தப் பிரசம்பாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan