உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் மூலம் 20 சதவீத இலங்கை மக்களுக்கு இலவச தடுப்பூசி
கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறுபவர்களின் முன்னுரிமை பட்டியல் தொடர்பில் சுகாதார அமைச்சு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்னிலை சுகாதாரப் பணியாளர்கள் உட்பட்ட பலர் உள்ளடங்குகின்றனர்.
சுகாதார அமைச்சின் ஆலோசகர் தொற்று நோயியல் நிபுணர் தீபா கமகே இது தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் மூலம் 20 சதவீத மக்களுக்கு இலவசமாக இந்த தடுப்பூசியை இலங்கை பெற உள்ளது.
ஆரம்பத்தில் தடுப்பூசிக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும் பின்னர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏனையவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டியேற்படும்.
எனினும் நிலைமை மாறிக்கொண்டேயிருக்கிறது, எனவே எதிர்காலத்தில் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி அதிகம் தேவைப்படுபவர்களைப்பற்றி விவாதித்து முடிவு செய்து முதல் தொகுப்பை வழங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் தனியார் துறையின் ஈடுபாடும் நிராகரிக்கப்படவில்லை என்றும் வைத்திய கலாநிதி தீபா கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார நிறுவனத்தால் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர்-பயோடெக் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.