நாட்டில் தொழில் இழப்போர் அதிகரிப்பு! அரசாங்கத்தை சாடும் சஜித்
நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையில் அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடு தற்போது பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.
மேலும் வளர்ந்து வரும் நாட்டில் இருக்க வேண்டிய சமூக ஒழுக்கம் மற்றும் நாகரிகம் மறைந்து வருகிறது. நாட்டில் பொறுப்புக்களை வகிக்கும் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதிப்பது, அவர்களுக்கு சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
70,000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்
நாட்டிலுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில்லை.அது தொடர்பான காரணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் தொடங்கப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட இப்போது மூடப்படும் சூழ்நிலையில் உள்ளன.
தற்போது 96,000 பேர் சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபுரிகிறார்கள்.அதில் 26,000 பேர் வேலை இழக்கப் போகிறார்கள். அங்கே 70,000 வேலை வாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இந்த ஆடைத் தொழிற்சாலைகள் உருவாக்கம் காரணமாக உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் நம் நாட்டில் தைக்கப்பட்டாலும், இன்று இந்த தொழிற்சாலைகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. தற்போதைய அரசாங்கத்தால் அமெரிக்க வரிகளைக் குறைக்க முடியாததே இதற்குக் காரணமாகும்.
இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தொழிற்சாலைகளைத் திறந்தவர்கள் அல்ல, தொழிற்சாலைகளை மூடி, தீ வைத்து எரித்து, தொழிலாளர்களை வீதிக்கு இறக்கியவர்கள், அவர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.