அடுத்த ஆண்டு சில நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
பொருட்களை பரிமாறிக்கொள்வது சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு சில நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
இதனடிப்படையில், முதல் கட்டமாக இந்தியா, சீனா, தாய்லாந்து நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக பங்களாதேஷூன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்கு ராஜதந்திர மட்டத்தில் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் இதற்காக இலங்கை அரசாங்கம் முன்வைத்த யோசனையை தாய்லாந்து அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது
இதற்கு அமைவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமாக தாய்லாந்து அரசின் பிரதானிகளுடன் எதிர்வரும் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
இதனை தவிர கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்வது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷூடனான இந்த பேச்சுவார்த்தை சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக செயலகத்தின் ஊடாக தொடர்ந்தும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சம்பந்தமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.