திருகோணமலையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி RAIGAM Salt தொழிற்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்களின் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வுடன் சுதேச மருத்துவ நல்வாழ்வு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மருத்துவ முகாமானது நேற்று (04) கும்புறுப்பிட்டி RAIGAM Salt தொழிற்சாலை வளாக கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.
சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்கள்
RAIGAM Salt நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபிலின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, கோபாலபுரம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் தலைமையில் இந்த ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
காலை 9.30 மணியிருந்து மதியம் 2.30 வரை இடம்பெற்ற இந்த சுதேச மருத்துவ நல்வாழ்வு இலவச மருத்துவ முகாமின்போது வைத்திய கலாநிதி பொல்ரன் ரஜீவினால் உடல், உள நோய்களுக்கான தீர்வுகள், நோய்களை எவ்வாறு கண்டறிதல், ஆரோக்கிய உணவு முறைகள் பற்றிய சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிற்சாலையில் கடமையாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கின்ற நோய்கள் மற்றும் வலிகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான இலவச மருத்துவ சேவையை வழங்கி வைத்த, சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் மற்றும் கோபாலபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நன்றிகளை தெரிவித்த அதேவேளை, இவ்வாறான மருத்துவ முகாமை இரு மாதத்துக்கு ஒருமுறை வழங்கி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளனர்.