மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட பாரியளவான மோசடி அம்பலம்
வாகன பதிவுகளில் இடம்பெற்ற கடுமையான முறைகேடுகள் அரசுக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கோபா என்ற பொதுக் கணக்குகள் குழுவின் கூட்டங்களின் போது, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் சம்பந்தப்பட்ட பாரிய அளவிலான மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக நடந்த பல கணக்காய்வு கண்டுபிடிப்புகளின் படி, இந்த சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கை
2019 ஆம் ஆண்டு கண்காய்வின் போது, மத நிறுவனங்களுக்கான உரிமங்களின் கீழ் 158 வாகனங்கள் மாற்றப்பட்ட பெயர்கள் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 120 வாகனங்களின் உற்பத்தி திகதிகள் பதிவு செய்வதற்கு முன்பே மாற்றப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2020 முதல் 2023 வரையிலான காலத்தில் 201சிசி மற்றும் 450சிசிக்கு இடையில் இயந்திர திறன் கொண்ட 296 உந்துருளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பதிவு கட்டணங்களை வசூலிக்கத் தவறியதால், அரசுக்கு 78.15 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பதிவு சான்றிதழ்கள்
அத்துடன், 3,088 உந்துருளிகள், அமைச்சரவை ஒப்புதல் அல்லது தேவையான சட்ட ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து இயந்திரம் மற்றும் சேசிஸ் எண்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட மோசடி வாகனப் பதிவுச் சான்றிதழ்களால் 1.2 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத பதிவு எண்களுக்கு சான்றிதழ்களை அங்கீகரிக்கப்படாத முறையில் வழங்கியமையால், 6.2 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இராஜதந்திர பதவியில் இல்லாதவர்களின் வாகனங்களுக்கு, இராஜதந்திர பதிவு எண்களை தவறாகப் பயன்படுத்தியமையால், 122 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
