நெடுங்கேணி மாமடுவில் நடைபெறும் மோசடி: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
வவுனியா - நெடுங்கேணி மாமடுவில் உள்ள மாமடு சிறி. வாணி வித்தியாலயத்தில் உள்ள பொருட்கள் நாளாந்தம் அத்துமீறிய முறையில் எடுத்துச் செல்லப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்.
குருவி போன்று தான் சிறுக சிறுக சேகரித்து சேர்த்த பொருட்கள் அவை என முன்னாள் அதிபர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண சபை உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் பலரிடம் இருந்து பாடசாலைக்கு என பல பொருட்களை பெற்றிருந்ததாக மாமடுவில் உள்ள மரக்கறி வியாபாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கான உரிய விதிமுறைகளை வட மாகாண கல்வித் திணைக்களம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி அதனைப் பேணுவதில்லை என குற்றம் சாட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
மாமடு சிறி. வாணி வித்தியாலயம்
வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் நிர்வகிக்கப்படும் பாடசாலையாக மாமடுவில் உள்ள வ/மாமடு சிறி வாணி வித்தியாலயம் அமைந்துள்ளது.
நீண்ட பாரம்பரியத்தினைக் கொண்ட இந்த பாடசாலை 17ம் கட்டை,கரடிப்புலவு,மாமடு, சாலம்பன் ஆகிய கிராமங்களில் உள்ள ஆரம்பம் நிலை மாணவர்களுக்கான பாடசாலையாக இருக்கின்றது.
தரம் ஐந்து வரை ஐம்பதுக்கும் குறையாத மாணவர்களை கொண்டு இயங்கிய இந்த பாடசாலையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை என மாணவர்களின் எண்ணிக்கையில் பெரியளவு மாற்றம் ஏற்படுவதாக அந்த பாடசாலை பற்றி குறிப்பிடும் போது அவ்வூர் மூதாட்டி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த பாடசாலையில் கற்று இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புக்களில் கல்வியைத் தொடர்வதற்காக தண்டுவான் தமிழ் வித்தியாலயத்திற்கு செல்ல வேண்டும்.
சில மாணவர்கள் நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு செல்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூடப்பட்டது ஏன்
ஒரு ஆசிரியையும் அதிபருமாக இரு ஆசிரியர்களையும் இருபத்தைந்து மாணவர்களையும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் போது அதிபராக இருந்த தர்மகுணவேல் வசுமதி ஓய்வு பெற்றுச் சென்றமையால் ஆசிரியை ஒருவர் மட்டுமே கடமையாற்றும் நிலை ஏற்பட்டது.
தான் தனியாக பாடசாலையை கொண்டு நடத்துவது கடினமாக இருப்பதாக அவர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து வலயக்கல்வி அலுவலகத்தினால் குறைந்த மாணவர்களை கொண்டுள்ளதால் பாடசாலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்து இப்பாடசாலை இப்போது மூடப்பட்டுள்ளது என இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் சாந்தி வசந்தன் குறிப்பிட்டார்.
தற்போது ஒதியமலை பாடசாலையில் கடமையாற்றும் இவர் தான் அதிபராக இருந்த போது பாடசாலைக்கு அதிகமான வளங்களைப் பெற்றுக் கொடுத்ததாக மேலும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த ஆசிரியையின் மக்கள் நலன் சாராத செயற்பாட்டினாலேயே தற்காலிகமாக பாடசாலை மூடப்பட்டுள்ளது.
இந்த பாடசாலை மூடப்பட்டதனால் கணிசமான வளங்களைக் கொண்டிருந்த இந்த பாடசாலை தொடர்ந்து இயங்குவதற்கு என தான் எடுத்திருந்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போய்விட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலைக்கென பெறப்பட்ட உதவிகள்
பாடசாலையினை சிறப்பாக கொண்டு நடத்துவதற்கு தேவையான வளங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் தாம் பெற்றுக் கொடுத்ததாக இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் குறிப்பிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் அணுசரனையில் பாடசாலைக்கான குழாய்க்கிணறு பெறப்பட்டது.
நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரமும் அவரால் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதனால் பாடசாலை அலுவலகத்திற்கான தளபாடங்கள் வழங்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தாரரான பரணிதரனால் பாடசாலை வளாகத்தினுள் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு நிலம் சுத்தமாக்கப்பட்டதோடு காணி வேலியும் செப்பனிடப்பட்டது.
கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் ஆகிய கிராமிய பொது அமைப்புக்களின் பங்களிப்பு பாடசாலையின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாடசாலையை சிறப்பாக முன்னெடுத்திருக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பொருட்கள்
மாமடு சிறி வாணி வித்தியாலயம் தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது. பாடசாலை மூடப்பட்ட போது இருந்தளவிலும் கூடிய பிள்ளைகள் இப்போது பாடசாலையினை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் தேவை உணர்ந்திருப்பதால் மீளவும் பாடசாலையை ஆரம்பிக்க கூடிய சூழல் இருப்பதாக கிராம மக்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தற்போது பாடசாலையில் முன்பள்ளி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் பாடசாலையின் தளபாடங்களையும் நீர் இறைக்கும் இயந்திரம், நீர்த் தாங்கி,நீர் தாங்கிக்குரிய இரும்பு கொட்டகையின் பகுதிகள் என எல்லாவற்றையும் நெடுங்கேணியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எடுத்துச் சென்றுள்ளார் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்பள்ளி ஆசிரியை தடுத்த போதும் வடமாகாண கல்வி திணைக்களத்தினால் வலயக்கல்வி திணைக்களத்திற்கு கூறப்பட்டு தனக்கு சொல்லப்பட்டதால் தான் எடுத்துச் செல்வதாக அவர் கூறி நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
கிராம சேவகரிடம் இது தொடர்பில் முறையிட்ட போதும் அவரிடம் இருந்து உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை என கிராம வாசியொருவர் குறிப்பிட்டார்.
அலுவலக பொருட்களை எடுத்துச் சென்ற போது கோட்டக் கல்விப்பணிப்பாளர் உடன் தொடர்பு கொண்டு ஏன் இவற்றை எடுத்துச் செல்ல பணிப்புரை வழங்கியிருந்தீர்கள் என கேட்ட போது எந்த பதிலும் வழங்காது அழைப்பை துண்டித்துவிட்டதாக முன்னாள் அதிபர் சாந்தியுடன் உரையாடும் போது குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
திருடப்பட்ட பாடசாலைப் பொருட்கள்
மாணவர்களை நெறிப்படுத்திச் செல்ல வேண்டிய துறைசார் அதிகாரிகளே நெறிமுறை தவறி நடக்கின்றனர்.
தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை மீண்டும் இயங்கக்கூடிய பொருத்தமான சூழலை ஏற்படுத்தி அதனை இயக்குவதற்கு முயல வேண்டும்.
அதுவரை அந்த பாடசாலைக்கென பெறப்பட்ட பொருட்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
எனினும் அவ்வாறில்லாமல் மற்றொரு பாடசாலையின் அதிபர் அவற்றை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கின்றமை பொருத்தப்பாடானதாக அமையாது என சமூகவிடய ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலையின் பொருட்களை எடுத்துச் செல்லும் போது கிராம மக்களின் உடன்பாடு பெறப்படுதல் அவசியம்.
முன்பள்ளியை செயற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நீர் இறைக்கும் இயந்திரத்தையும் நீர்த்தொட்டியையும் எடுத்துச் செல்லும் நாகரீகம் எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலைகளை நிர்வகிக்கும் வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் போன்ற கல்வி நிறுவனங்களின் பொறுப்பற்ற நிர்வாக ஆளுமையே இவ்வாறான தவறுகளுக்கு காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்திட்டமையும் நோக்கத்தக்கது.
பாடசாலை சுற்றாடலில் அதிகளவான மதுபான வெற்றுப் போத்தல்கள், பேணிகள் இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
ஒரு கிராமத்தில் கோவிலுக்கு நிகரான பாடசாலை மோசமான முறையில் பேணப்படுவதும் அவதூறான செயற்பாடுகளை அப்பாடசாலை தொடர்பில் மேற்கொள்ளப்படுவதும் மாணவர்களுக்கு முன்மாதிரியான செயற்பாடாக அமையாது.
மூடப்பட்ட பாடசாலை மீளவும் இயங்க வேண்டும் என்பது அதிகமான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 16 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.