20 மில்லியன் தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைந்த பிரான்ஸ்
நாடு தழுவிய முடக்குதலை தளர்த்துவதன் ஒரு கட்டமாக உணவகங்களில் மொட்டை மாடிகளை மீண்டும் திறக்க சில நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கிய பிரான்ஸ் 20 மில்லியன் கோவிட் தடுப்பூசியை செலுத்தும் இலக்கை நேற்று அடைந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த இலக்கு குறித்து அறிவித்துள்ளார்.
20 மில்லியன் என்ற இலக்கானது நாட்டின் சனத்தொகையில் 30 வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இதன் சரியான எண்ணிக்கை 20,086,792 எனவும் 8,805,345 பேர் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 millions : ✅ pic.twitter.com/tYQOdM4TPY
— Emmanuel Macron (@EmmanuelMacron) May 15, 2021
இது முழு பிரான்ஸ் நாட்டிற்கும் முக்கியமான தருணம் எனவும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பிரான்ஸ் பிரதமர் Jean Castex, பாரீஸ் Porte de Versailles conference center இல் தடுப்பூசி போடும் இடத்தை பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதிக்குள் 30 மில்லியன் ஆரம்ப தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளது என இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
முன்னுரிமையாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூ வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளை தற்போது மேற்கொள்ள முடியும்.
24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். இதனிடையே பிரான்ஸ் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை வரை குறைவாக காணப்பட்டது.
அண்மைய புள்ளி விபரங்களின் படி 4271 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்தினம் அந்த எண்ணிக்கை 4352 ஆக காணப்பட்டது.