சீனாவுக்கு எதிராக இலங்கையில், இந்தியாவின் ஆதிக்கத்தை வலியுறுத்தும் பிரான்ஸ்!
இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்குக்கு இலங்கையை உதாரணமாக காட்டியுள்ள பிரான்ஸ், பிராந்தியத்தில் வெளிப்படையான நிதியுதவியை உறுதி செய்ய இந்தியா முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தோ - பசுபிக் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனா தனது நிதிச் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் "வெளிப்படையான" மற்றும் "பசுமை" நிதியளிப்பு முன்முயற்சி ஒன்றை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதாக பிரான்ஸின் இந்திய துாதுவர் இம்மானுவேல் லெனைய்ன்( Emmanuel Lenain) கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பெரிய பிரச்சனை. என்று குறிப்பிட்டுள்ள அவர், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளில் திட்டங்களுக்கு நிதியளிக்க, சீனா தனது நிதியுதவியைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் கடந்த மாதம் ஏற்றது.
இதனையடுத்து எதி்ர்வரும் 22 ஆம் திகதி அன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்தோ-பசிபிக் மன்றத்தை நடத்துகிறது.
இதில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியிலேயே பிரான்ஸின் வலியுறுத்தல் வெளியாகியு்ள்ளது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் 35 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனில் 10 வீதத்தை சீனா கொண்டுள்ளது என இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, நிதியுதவி செய்த முக்கிய திட்டங்களில் 99 குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் 660 ஏக்கர் நிலத்தில் சிறப்பு பொருளாதார மையமாக அமைந்துள்ள கொழும்பு துறைமுக நகரம் ஆகியன முக்கியமானவையாகும்.
இந்த திட்டங்களின் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 'முத்து' என்ற அழைக்கப்படும் இலங்கையில் வசதிகளை உருவாக்கும் சீனாவின் மூலோபாய திட்டம் முன்னெடுக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.



