ரணில் மற்றும் ரத்ன தேரருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
ரணில் விக்கிரமசிங்க மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகாது என உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வினிவித பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் அதன் உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இது குறித்து சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில்,
ஆகஸ்ட் 7, 2020 அன்று, ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேசிய பட்டியல்களில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய பெயர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியும், எங்கள் மக்கள் சக்தி கட்சியும் தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தொடர்புடைய காலகட்டத்தில் வழங்கவில்லை.
ரணில் விக்ரமசிங்க மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரை பல மாதங்கள் கழித்து தேசிய பட்டியலில் உறுப்பினர்களாக நியமிக்க தேர்தல் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கை முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.
ஆகையினால், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கவும், தேசிய பட்டியலில் சட்டவிரோதமாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
