வீதியில் சென்றவர்களிடம் நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உட்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடமிருந்து தங்க நகைகளை அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுகளையுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 பவுண் கொண்ட 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவில் கடந்த 16ஆம் திகதி வீதியில் சென்ற பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அன்றைய தினம் இளவாலை மற்றும் சுன்னாகம் பகுதிகளிலும் வீதியில் சென்ற இருவேறு நபர்களிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன.
சம்பவங்கள் தொடர்பில் அச்சுவேலி, சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மூன்று வழிப்பறிச் சம்பவங்களுடன் மேலும் வட்டுக்கோட்டையில் ஒருவரிடமும், மருதனார்மடத்தில் வியாபாரி ஒருவரிடமும் தங்க நகைகள் அபகரித்தமையையும் சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வழிப்பறியில் கொள்ளையிட்ட நகைகளை சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் சந்தேகநபர்கள் விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட 5 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
