தியாக தீபம் திலீபனின் நினைவால் தகர்ந்த யாழ். கோட்டையும் அதனால் மிளிர்ந்த ஈழத்தமிழர்களின் தொல்லியல் சான்றுகளும் (Video)
தமிழ்ச்சமூகத்தில் திலீபன் என்ற ஒரு தனி மனிதனுடைய தீர்க்கமான கருத்துக்கள் சமூக ஆழ்மனக் கருத்துக்களாக நிலைத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகிறது.
இன்று திலீபன் தன்னை உருக்கி 35 ஆண்டு கடந்துவிட்டது. இன்றும் திலீபனின் கனவுகள் அப்படியேதான் நடைபோடுகிறது. ஆனால் அவன் மூட்டிய தீ இன்றும் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டே இருக்கிறது.
ஈழமக்களின் மனங்களில் ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் என்பதை திலீபனின் தியாக வேள்வி நடந்த நாட்களில் நிகழ்கின்ற சம்பவங்களும் அதன் பின்னான கடந்த 35ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற ஏதோ ஒரு வகையான தமிழ் மக்கள் எழுச்சிகள், நினைவுகள் எதிர்பாராத சாதக நிகழ்வுகள் நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
யாழ். கோட்டை
அந்தவகையில் திலீபன் கூறிய வாசகங்களான "யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் தமிழீழ விடுதலையின் முதல்நாள்" மற்றும் " யாழ். கோட்டையில் புலிக்கொடி பறப்பதை வானிலிருந்து 651 வது ஆளாக நான் பார்ப்பேன்" ஆகிய வாசகர்கள் திலீபன் ஆகுதியாகி மூன்றாவது ஆண்டில் நிறைவேறின.
80களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் மனதில் தமிழர்கள் இரத்தத்திலும், அழிவிலும் கட்டப்பட்ட யாழ். கோட்டை தகர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதை ஆரம்ப காலங்களில் பல தடவைகள் அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூறியிருக்கின்றார்.
இதனால் தான் 90 களின் முன்னர் இரண்டு தடவைகள் யாழ். கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. போர்த்துக்கேயர்களால் 1622 இல் பண்ணைப்பாலத்தருகில் பிலிப் தே ஒலிவேரா தலைமையில் சதுர வடிவில் கட்டப்பட்ட யாழ். கோட்டையை அதன் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் புதுப்பித்து ஐங்கோண வடிவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மிகவும் பலமான கோட்டையாக 1792 இல் கட்டி முடித்தனர்.
இதை ஆய்வாளர் என். டபிள்யூ ஏ நெல்சன் அவர்களே குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட பலமான கோட்டை ஒல்லாந்தரின் பின் பிரித்தானியரிடமும், இலங்கை இராணுவத்திடமும், இந்திய இராணுவத்திடமும், புலிகளிடமும் என பலரது கைகள் கைமாற்றப்பட்டிருந்தது.
ஏற்கனவே யாழ். கோட்டையை 1984 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ப் போராளிகள் ஒன்றிணைந்து முற்றுகையிட்டிருந்தனர். இம்முற்றுகைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய யாழ். மாவட்டத்தளபதி கேணல் கிட்டு அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
முற்றுகைக்குள் உள்ளான யாழ். கோட்டை
10.07.1984 முற்றுகைக்குள் உள்ளான யாழ். கோட்டை இந்திய இராணுவம் யாழ். கோட்டைக்குள் பிரவேசிக்கும் வரை (03.08.1987) மூன்று ஆண்டுகள் 23 நாட்கள் தொடர்ந்திருந்தன. ஆரம்பத்தில் கோட்டையின் வெளிப்புற வீதியில் புலிகளின் அரண்களோடு புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கக் குழுக்களின் கண்காணிப்பு அரண்களும் அமைந்திருந்தன.
பின்னர் அவ்வாயுதக் குழுக்கள் முரண்பட்டுக்கொண்டு வெளியேற அதாவது இம் முற்றுகைத் தாக்குதலில் இருந்து புளொட் முதலில் வெளியேற அதனைத்தொடர்ந்து ரெலோ ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கக்குழுக்களும் வெளியேறினர். இதன் பின்னர் விடுதலை புலிகள் மட்டும் இக் கோட்டையைச் சுற்றி கன்னிவெடிகளை விதைத்து இறுதிவரை முற்றுகையிட்டிருந்தனர்.
இம்முற்றுகை இந்திய இராணுவம் யாழ். கோட்டைக்குள் நுழையும் வரை தொடர்ந்தது. 03.08.1987 இந்திய இராணுவம் யாழ். கோட்டைக்குள் நுழைய அப்போதைய யாழ். மாவட்ட தளபதி கேணல் கிட்டு தலைவருக்கு பின்வருமாறு செய்தி அனுப்பினார்.
" அன்பான தலைவரே!
இந்திய அமைதிப்படையினரின் கோட்டைப் பிரசவத்துடன் தாங்கள் எனக்கிட்ட பணியை முடித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகள் 23 நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையில் எமக்கிட்டபணி செவ்வனே நிறைவேற்றப்பட்டது." என அறிக்கை அனுப்பிவிட்டு படையணிகளை விலக்கிக் கொண்டார்.
இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறும் வரை கோட்டைக்குள் இருந்தனர். ஆனாலும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் 10.10.1987 மீண்டும் கோட்டையை சூழ விடுதலைப்புலிகளின் படையணிகள் தடுப்பரண்களை அமைத்து காவற்கடமையில் இருந்தனர்.
கோட்டையைச்சுற்றி புலிகள் அமைத்துக்கொண்ட இறுக்கமான முற்றுகையை உடைத்துக்கொண்டு இந்தியப் படைகளால் வெளியேற முடியவில்லை. ஆனால் பலாலியிலிருந்தும், காங்கேசன் துறையிலிருந்தும், அராலியிலிருந்தும் மும்முனைகளில் முன்னேறி யாழ். நகரை அண்மித்தபோது விடுதலைப் புலிகள் தவிர்க்க முடியாமல் முற்றுகையை விலக்கி யாழ். கோட்டை பகுதியை விட்டு புலிகளின் படையணிகள் வெளியேறின.
இலங்கை இராணுவம்
இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கை இராணுவம் கோட்டைக்குள் சென்று குடிகொண்டனர். இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் 11.06.1990 யாழ். கோட்டை இராணுவ முகாமை மீண்டும் புலிகள் முற்றுகைக்குள் கொண்டுவந்தனர். எந்த இழப்பு கொடுத்தாயினும் தியாக தீபத்தின் நாளில் கோட்டையை கைப்பற்றுவது என்ற உறுதியில் புதுப்புது உத்திகளுடனும், முயற்சிகளுடனும் புலிகள் யாழ். கோட்டை முற்றுகையை மேற்கொண்டனர்.
கோட்டைக்குள் இருந்த இலங்கை இராணுவமும் ஒப்பரேசன் போர்ட், வோட்டர் கேற், எனப்பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்விகண்டது.
மாறாக விடுதலைப் புலிகளின் தரப்பில் பிரிகேடியர் பாணு அவர்கள் இம்முற்றுகை தாக்குதல்களை ஒருங்கிணைத்தார். ஒருதரம் கோட்டையின் வரலாற்றை திரும்பி பார்போமானால் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய ஒல்லாந்தப்படை போர்த்துக்கேயப் படைகளை யாழ். கோட்டைக்குள் முடக்கி முற்றுகையிட்டது.
ஒல்லாந்த தளபதி அட்மிரல் கொமுசாறி றைக்ளொவ் வன்ஹுன் தலைமையில் 16.03.1658 யாழ். கோட்டையை முற்றுகையிட்டதனூடாக போர்த்துக்கேயர்களுக்கு வெளியிலிருந்து உணவு, ஆயுத தளபாடங்கள் முதலான வளங்கள் எதுவும் செல்லாது சுற்றிவளைத்தனர்.
இம் முற்றுகையானது 21.06.1658 வரை அதாவது 101 நாட்கள் யாழ். கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டதன் பின்னர் கைப்பற்றினர்.
இந்த வரலாற்றுப் பின்னணியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளும் இந்த ஒல்லாந்த தளபதி கொமுசாறி றைக்ளொவ் வன்ஹுன் உத்தியையே நடைமுறைப்படுத்தினர். இங்கு ஒரு வித்தியாசம் என்னவெனில் யாழ். கோட்டைக்குள் போர்த்துக்கேயரை ஒல்லாந்தப்படைகள் முற்றுகையிடும் போது யாழ். கோட்டை அவ்வளவு பலமாக இல்லை.
ஆசியாவிலேயே மிகப் பலம் வாய்ந்த கோட்டை
ஆனால் விடுதலைப் புலிகள் யாழ். கோட்டையை முற்றுகையிடும் போது ஆசியாவிலேயே மிகப் பலம் வாய்ந்த கோட்டையாக அது விளங்கியதோடல்லாமல் நவீன ஆயுதப்பாவனைகளையும் கொண்டதாக காணப்பட்டது.
இவ்வாறு மூன்றாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்ட யாழ். கோட்டை மீதான புலிகளின் முற்றுகையானது 107 நாட்கள் நீடித்தது. தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் நெருங்கியவேளை 16.09.90 புலிகளின் தளபதிகள் உறுதி ஒன்றினை எடுத்திருந்தனர்.
அது இன்னும் 10 நாட்களில் யாழ். கோட்டையை முற்றுமுழுதாகக் கைப்பற்றி திலீபன் வீரச்சாவடைந்த நேரத்தில் கோட்டையில் கொடி ஏற்றுவது என்பதே அந்த உறுதியாகும்.
அதுவரையான கோட்டை முற்றுகையில் புலிகள் தங்கள் பலம் முழுவதையும் காட்டியிருந்தும் கோட்டை வீழவில்லை.
26.09.90 அதிகாலை 12.15 மணிக்கு திலீபனின் 3வது நினைவு நாளில் எப்படியாவது கோட்டையை கைப்பற்றுவது என்ற உறுதியில் பசீலன் எறிகணைகள் சரமாரியாக முழங்க இறுதிக்கட்ட முற்றுகை தாக்குதல் ஆரம்பமானது.
இதனால் நிலை குலைந்தவர்கள் கோட்டைக்குள் உணவும் இல்லாது போனதால் பெண்கள் சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ஒல்லாந்தர் அமைத்த நீர்வழியால் மண்டைதீவுக்குத் தப்பிச் சென்றனர்.
அதிகாலை 04.30ற்கு ஆசியாவிலேயே பலம் பொருந்திய கோட்டை என அன்று ஒல்லாந்தர்களாலும், பிரித்தானியர்களாலும் சான்றிதழ் வழங்கப்பட்ட யாழ். கோட்டை புலிகளின் வசமானது.
107 நாட்கள் தொடர் முற்றுகையின் பின்னர் ஆசியாவின் மிகப்பலம் வாய்ந்த இலகுவில் எதிரிகளால் கைப்பற்றி வெற்றிகொள்ள முடியாதென பேரரசுகள் வியந்துரைத்த யாழ். கோட்டை தமிழர் சேனையால் தியாகி திலீபனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் 26.09.1990 வீழ்த்தப்பட்டது.
கோட்டையில் தமிழன் கொடி பறந்தது
திலீபன் தியாகியான நேரமான 10.48 ற்கு அப்போதைய யாழ். மாவட்ட தளபதியாக இருந்த பிரிகேடியர் பாணு அவர்களால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு 400 ஆண்டுகள் தமிழர்களை அடக்கிய ஆதிக்கச் சின்னமாக விளங்கிய கோட்டையில் தமிழன் கொடி பறந்தது. உலக வரலாற்றில் ஒரு கோட்டை இரண்டு படையினரால் (ஒல்லாந்தப்படை, தமிழர் படை) 100 நாட்களுக்கு மேல் முற்றுகையிடப்பட்ட வரலாறு எங்குமில்லை எனலாம்.
இது ஈழமண்ணிலேயேதான் நடந்திருக்கிறது. இது உலக வரலாற்றில் ஒரு முக்கிய பதிவாகும். யாழ். கோட்டை கைப்பற்றப்பட்டதன் பின்னர் அதை தகர்க்கின்ற முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இக்கோட்டையினை போர்த்துக்கேய கப்பித்தான் மேஜர் பிலிப் தே ஒலிவேரா கட்டும்போது யாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்களின் கற்களை கோட்டை கட்டுமிடத்திற்கு எடுத்துவர யாழ். மக்களினை வரிசையில் கோட்டை வரை நிறுத்தி அவர்களின் கைகளினால் அக்கற்களைக் கைமாற்றி கோட்டைக்கு எடுத்துச்சென்றே கோட்டையினைக் கட்டியிருந்தான்.
இந்த நிகழ்வு 80 ஆரம்பங்களிலிருந்தோ விடுதலைப் புலிகளின் தலைவரை வெகுவாகப் பாதித்ததன் விளைவுதான்.
"தமிழர்களை அடிமைகளாக்கி அவர்கள் இரத்தத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இருப்பதை ஒரு அவமானச்சின்னமாகவே நான் பார்கிறேன்" என்று அவரைச் செவ்வி வழங்கவும் வைத்தது.
தொல்லியல் பொருட்கள்
அத்துடன் யாழ். கோட்டை இடிக்கப்படும் போது அங்கிருந்து கோயில்களின் கற்களுடன் சில தொல்லியல் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது அவை தொல்லியல் ரீதியாக ஆராயப்படவில்லை. 1990 ஐப்பசி 13 ஆம் திகதி உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் யாழ். கோட்டையில் வைத்து ஈழநாதம் பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு.பேபி சுப்பிரமணியம் அவர்கள் , "போர்த்துக்கேயர் இக்கோட்டை கட்டும்போது யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களையும், பெரிய வீடுகளையும் இடித்தே கட்டினர்.
இதன் அழிபாடுகளே தற்போது நீங்கள் காணும் கற்கள். இதற்கு அப்பால் இக்கோட்டைக்குள் தமிழர்களின் தொன்மையான அடையாளச்சின்னங்கள் புதைந்து கிடக்கிறது. இக்கோட்டையை முழுவதுமாக ஒருவேளை அழித்தால் அவற்றை வெளிக்கொணரலாம்" என்றார்.
அவர் அன்று என்ன மனவோட்டத்தில் சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொன்னது பின்னர் உண்மையென 2011 நிரூபணமாகியிருந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி அதனை எண்கோணக் கோட்டையாகவும், ஆசியாவின் பலமான கோட்டையாவும் கட்டிய ஒல்லாந்த தேசமான நெதர்லாந்து அரசு யாழ். கோட்டையை மீள் அமைத்து அதை தமது நினைவுகளைப் பேணும் ஒரு அருங்காட்சியகமாக மாற்றும் நோக்குடன் கோட்டைக்குள் புணரமைப்பு வேலையை ஆரம்பித்தது.
இதன்போது தொல்பொருட்கள் பல கண்டெடுக்கப்பட பிரித்தானியாவிலுள்ள டர்காம் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தொல்லியல் பேராசிரியர் றொபின்கொன்னிங்காம் அவர்களின தலைமையில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து மேற்பரப்பு அகழ்வாய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இவ் அகழாய்வின் ஆரம்ப கட்ட அகழ்வின் மூலம் கிடைக்கப்பட்ட ரோம மட்பாண்டங்கள், மண்ணுருவங்கள், காசுகள், கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள் என்பன கி.முவிற்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டை இருந்த இடம் ஒரு துறைமுகாகவும் இவற்றிலிருந்து ரோமம். தமிழகம், சீனம், பாரசீகம் முதலான இடங்களுக்கான வர்த்தகங்கள் முதன்முதலாக வெளிக்கொணரப்பட்டது.
இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். குடா நாட்டில் ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்தனர்.
அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். குடா நாட்டில் ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்தனர் என்பதை சான்றாதாரங்களுடன் நிரூபித்திருந்தது.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட ஆய்வு 01.7.2017 முதல் 27.07.2018 காலப்பகுதியில் மீண்டும் ஒரு ஆய்வு கொன்னிங்காம் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் மேலதிகமாக ஏராளமான தொல்லியல் சான்றுகள் கிடைத்தன.
யாழ். கோட்டைக்குள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த கருப்பு -சிவப்பு மட்பாண்டம் யாழ். கோட்டைப்பகுதியில் ஒரு பெருங்கற்கால மையம் இருந்துள்ளது என்பதை உறுதி செய்வதாக பேராசிரியர் ரொபின் கன்னிங்காம் குறிப்பிட்டார்.
கோட்டைப் பகுதியில் வாழ்ந்த ஆதி மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன.
அத்துடன் இங்கு கிடைத்த உரோம ரவுலட் மட்பாண்டங்கள், ஜார் மதுச்சாடிகள், சீனப் பொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டதானது கிறித்துவுக்கு முந்தைய காலத்திலிருந்து யாழ்ப்பாண கோட்டை தமிழர்களின் சமுத்திர வாணிபத்தில் இலங்கையின் மையப்புள்ளியாகத் திகழ்ந்திருக்கிறது என்றார்.
12 நூற்றாண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் ஒரு அரசு தோன்றியிருக்கவில்லை என்ற தமிழறிஞர்களின் கருத்தை யாழ். கோட்டை, கந்தரோடை அகழாய்வுகள் பொய்ப்பித்திருக்கிறது. இதற்கும் ஒரு படி மேலாக யாழில் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் சமுத்திர வாணிபம் இடம்பெற்றிருக்கிறது என்பதை யாழ். கோட்டை அகழாய்வு நிரூபணம் செய்திருக்கிறது.
இது புலிகளின் யாழ். கோட்டை தகர்ப்பின் மூலமே வெளிக்கொணரப்பட்டது எனலாம் விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்றுப் பொக்கிசமான யாழ். கோட்டையை தகர்த்து விட்டார்கள் என குமுறுபவர்கள் நம்மத்தியில் உள்ளனர்.
வடபகுதி வரலாற்றுப் பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என குமுறுபவர்கள் அல்லிராணி கோட்டை என நாம் அழைக்கும் அரிப்பு பிரதேசத்தில் உள்ள ஆளுநர் பிரட்டிக் நோர்த் அவர்களினால் கி.பி 1804 இல் கட்டப்பட்ட மாளிகையை ஏன் புணரமைத்துப் பாதுகாக்கவில்லை.
யார் என்ன விமர்சனத்தை முன்வைத்தாலும் என்னைப் பொறுத்தவரையில் யாழ். கோட்டை புலிகளினால் கைப்பற்றப்பட்டு தகர்க்கப்பட்டதனாலேயே அங்கு தொல்லியல் சான்றுகளும், தமிழரின் பெருங்கற்கால வாழ்விடத் தடயங்களும் கிடைத்தன அத்துடன் அதை மீள உருவாக்கும் பணியும் அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இக்கோட்டையை தகர்க்காது போயிருந்தால் கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால பெருங்கற்காலத் தமிழனின் தடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்காது. கோட்டை விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டதன் மூலம் நன்மையே விளைந்திருக்கிறது. இது திலீபனின் தியாகத்தினாலேயே இவை நிகழ்ந்தது எனலாம்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
