செய்தியாளரின் கேள்வியால் கோபத்துக்கு உள்ளான முன்னாள் பிரதமர்
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) எழுப்பப்பட்ட கேள்வியால் கோபத்திற்கு உள்ளான அவர், நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்துச் சென்றுள்ளார்.
சிங்கள இணையத்தள வலையெளித் தளம் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேர்காணலை நடத்தினார்.
அப்போது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்கள் பாதுகாக்கப்பட்டது சம்பந்தமாகவும் இவர்கள் அனைவரும் நண்பர்கள், இவர்கள் திருடர்களை பிடிக்க மாட்டார்கள் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கோபத்திற்கு உள்ளான முன்னாள் பிரதமர், தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கோரினார்.
சிக்கிக்கொண்ட இடத்தில் தொடர்ந்தும் சிக்க வேண்டாம். நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம். இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது நிறுத்துவோம்.
திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள் என முன்னாள் பிரதமர் கூறினார்.
எனினும் தொடர்ந்தும் அந்த கேள்வி தொடுக்கப்பட்டதால், இல்லை இதனை நிறுத்துவோம். நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு முன்னாள் பிரதமர் எழுந்து சென்றதை காணக் கூடியதாக இருந்தது.
அதேவேளை இந்த நேர்காணலில் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாகவும் குறித்த செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார், இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, பிணை முறி விவகாரத்தில் அரசாங்கத்தின் பணம் கொள்ளையிடப்படவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
அது அரச பணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளது. எனக்கும் அதில் தொடர்பில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும் தான் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.