கோட்டாபய தலைமறைவாக இருக்கிறாரா...! இலங்கை திரும்புவது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவித்தல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபய விசா பெற்றே சிங்கப்பூர் சென்றார்
முன்னாள் ஜனாதிபதி தலைமறைவாக இருக்கின்றார் என்பதை எந்த வகையிலும் நான் நம்ப மாட்டேன். ஏனையோரை போன்று உத்தியோகபூர்வமாக விசா அனுமதியை பெற்றே முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவார் என நான் அறிந்திருந்தேன்.
சில தகவல்கள் கூறுவது போல் அவர் அங்கு அடைக்கலம் கோரவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு மற்றும் அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை திரும்பவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக வினவிய போதே அமைச்சர் பந்துல இதனை கூறியுள்ளார்.
பயண திட்டங்களை அறிவிக்காத கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதியை போர் குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு சிங்கப்பபூர் சட்டமா அதிபரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு பற்றியோ, அவர் நாடு திரும்ப உள்ளது குறித்தோ, அமெரிக்க அவருக்கு விசா வழங்க மறுத்தது தொடர்பாகவோ அமைச்சரவையில் பேசப்படவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவார் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், எந்த பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள். இதனை தவிர அரசியல் ரீதியாக எதுவுமில்லை.
அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டால், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தமான பயண திட்டங்களோ அவர் திரும்பி வரும் திகதி, காலம் தொடர்பாகவோ அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.