ஐ.தே.கட்சியை தூக்கி நிறுத்த தயாராகும் முன்னாள் பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சிறிகொத்தவின் தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் சிறிகொத்தவில் பல கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. கட்சியின் இணை அமைப்புகளான இளைஞர் முன்னணி, லக் வனிதா முன்னணி உட்பட கட்சியின் அமைப்புகளை செயற்பட வைத்து, கட்சியை வலுப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கு 150 உறுப்பினர்களை கொண்டதாக இளைஞர் முன்னணியை உருவாக்கவும் அதற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர கடந்த 7 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தில் தொகுதி அமைப்பாளர்களுக்கு வெற்றிடம் நிலவும் இடங்களுக்கு கிடைத்துள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றை பரிந்துரைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த கூட்டங்களில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரஉள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்ளவில்லை. இவர்கள் கட்சியின் தலைவருடன் கொள்கை ரீதியான முரண்பாட்டு மோதலில் இருந்து வருகின்றனர்.