முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விடுதலை
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் பிணை தேவையற்றது எனவும், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முனிலையானால் போதுமானது எனவும் மேர்வின் சில்வாவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலதிக தகவல்:ராகேஷ்
முதலாம் இணைப்பு 1.42 PM
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.
மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை கடந்த வாரம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்ததாகவும் அந்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்
மேர்வின் சில்வா கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் சென்று அதன் செய்திப் பணிப்பாளரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மேர்வின் சில்வாவை ஒரு சிறிய அறையில் சில மணி நேரம் தடுத்து வைத்தனர்.
இதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சென்று மேர்வின் சில்வாவை பாதுகாப்பாக வெளியில் அழைத்து வந்தனர்.
மேர்வின் சில்வா வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது ஊ சத்தமிட்டு ஊழியர்கள், அவர் மீது மை கலந்த திரவம் ஒன்றை வீசினர்..