இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது..!
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாகாண சபையின் உறுப்பினர்கள் பங்கெடுப்புடன் மாகாண சபையின் கடந்த கால அனுபவம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று இன்று (21.09.2025) நடைபெற்றது.
இதன்பின் வடக்கு மாகாண சபையின் மூன்னாள் உறுப்பினர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன், தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட், ஈ.பி.டி.பி சார்பில் தவனாதன், பிளொட் சார்பில் கஜதீபன், ரெலோ சார்பில் குகதாசன் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தேர்தல் தாமதம்..
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், "குறித்த சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. இதன்போது முக்கிய விடயமாக தேர்தல் பின்நோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் இருந்து ஆராயப்பட்டது.
குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு எதிரானதாகவே இருந்தது.
குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தை கையிலெடுத்து அரசுகள் காலத்தை தாழ்த்தி வருகின்றது.
புதிய முறைமை என்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடு நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது” என குறிப்பிட்டனர்.




