ஆளுநர் அலுவலகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறிய அனுராதா யகம்பத் (Photos)
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யகம்பத் இன்று (16.05.2023) மாலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளார்.
தமது அலுவலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களை அவர் சந்தித்துள்ளதுடன், அவர்கள் வழங்கிய பிரியாவிடையை அடுத்து தனது சொந்த வாகனத்தில் பயணத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஆளுநர்
இதன்போது அனுராதா யகம்பத் கூறுகையில், நாட்டின் பொருளாதார கஷ்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே நான் இன, மத வேறுபாடு இன்றி அனைவருடனும் சிநேகபூர்வமாக எனது கடமைகளை செய்திருந்தேன்.
அத்துடன் எனக்கு அனைவரும் வழங்கிய ஆதரவை நான் எப்போதும் மறக்கப் போவதில்லை. மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், ஊடக சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.