ஆயுதமேந்திய கும்பல்கள் இலங்கையில் நடத்திய கொடூரம்! ரணில் தொடர்பில் பசில் கூறியதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பந்துல
ஜனாதிபதி பதவியில் ரணில் விக்ரமசிங்க இருப்பதை ஆதரிப்பதன் மூலம் பொதுஜன பெரமுன சரியான தீர்னமானத்தை எடுத்துள்ளது என்று முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்து சரியானதே. இல்லாவிட்டால் நாட்டில் ஒரு அராஜக நிலைமை உருவாகியிருக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்திய கும்பல்களால் இழைக்கப்பட்ட கொடூரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் திறன் இல்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
1988-_89 பயங்கரவாதம் நிலவிய காலத்தில் பல்வேறு உத்தரவுகளால் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாமல் சில நாட்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதைக் கண்டோம்.
அந்த உத்தரவை மீறுபவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆயுதமேந்திய கும்பல்கள் பலவந்தமாக வீடுகளுக்குள் நுழைந்து பெற்றோரையும் குழந்தைகளையும் மண்டியிடச் சொன்னார்கள். அந்தக் கும்பல்களால் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டது.
நடிகர் விஜய குமாரதுங்க கொல்லப்பட்ட போது, அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்க முடியவில்லை என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது விஜய குமாரதுங்க குறித்து நாளிதழுக்கு பேட்டி கொடுக்க யாரும் இல்லை. விஜே ஒரு சிறந்த மனிதர் என்று நான் ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவுக்கு பேட்டியளித்தேன்.
மே 9, 2022 அன்று நாட்டில் இதே அராஜகச் சூழலை நாங்கள் அனுபவித்தோம்.
பணம் அச்சிடுதல், வட்டி வீதங்கள், மாற்று வீதங்கள் மற்றும் சர்வதேச கடன் செலுத்துதல் ஆகியவற்றில் புரிதல் இல்லாதவர்களால் ஒருபோதும் அரசாங்கத்தை நடத்த முடியாது. சிலர் கூட்டங்களை நடத்திவிட்டு எதையாவது பேசலாம்.
சில சமயங்களில், அந்த உரைகளை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்கிறார்கள். ஆனால், அவர்களால் நாட்டை ஆள முடியாது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் நாட்டுக்கு திட்டவட்டமாக கூறுகின்றோம்.
அந்நிய செலாவணி நாட்டுக்கு வெளியே செல்வதைத் தடுக்கவும், நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவதைத் அதிகரிக்கவும் உதவும்.
போட்டி நிறைந்த சூழ்நிலையில் தரமான கல்வியைப் பெறவும் இது உதவும். இதுதான் எங்களின் கொள்கை, நாங்கள் வெளிப்படையாகச் சொல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.