உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி! மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டம்
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி இன்று மூன்றாவது நாளாகவும் தனது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முன்னாள் போராளிக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் அவரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டு செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் குறித்த இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஒரு கால அவகாசம்
இருப்பினும் உடனடியாக இதனை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தை கொடுத்து தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரி இருந்தனர்.
இருப்பினும் தமிழரசு கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்திலே தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையிலே தாங்கள் விடயங்களை கையாளுவதாக உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக குறித்த முன்னாள் போராளி அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |