கொலை வழக்கில் இருந்து தப்பித்த முன்னாள் பிரதியமைச்சருக்கு மீண்டும் சிக்கல்
நபரொருவரைப் படுகொலை செய்த வழக்கில் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டதற்கு எதிரான ஆட்சேபணை மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அன்றைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து றக்வானை நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிராக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
ஆட்சேபணை மனு
எனினும், கடந்த கோட்டாபய ஆட்சியின் போது குறித்த தீரப்புக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டில் அவர்களுக்கு எதிரான மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டு, மூவரும் நிரபாராதிகளாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபணை மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த ஆட்சேபணை மனுவை விசாரணைக்கு ஏற்கவுள்ளதாக அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் பெப்ரவரி தொடக்கம் குறித்த ஆட்சேபணை மனு தொடர்பான விசாரணைகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




