முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி அவுஸ்திரேலியா - சிட்னியில் நேற்று(18.01.2025) காலமானார்.
சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இலங்கைத் தமிழ் முன்னணி சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிவா பசுபதி, அரச வழக்குரைஞர்களின் இயக்குநராகப் பணியாற்றினார்.
1974 முதல் 1975 வரை அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், பின்னர் அவர் 1975 முதல் 1988 வரை சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். சிவா பசுபதிக்கு 1989ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.
மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்
முன்னாள் இலங்கை அரச தலைமை வழக்குரைஞரும், இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபருமான சிவா பசுபதி ஓய்வுபெற்ற பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வாழ்ந்து வந்தார்.

2002இல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் ரணில் விக்ரமசிங்கவின் அரசுக்கும் இடையில் பேச்சுகள் தொடங்கிய போது, விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும் விடுதலைப்புலிகளால் நிறுவப்பட்ட அரசியல் விவகாரக் குழுவுக்கு சிவா பசுபதி சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
2002 - 2006 காலப்பகுதியில் நோர்வே தலைமையிலான அமைதிப் பேச்சுகளில் அவர் பங்கேற்றார். சிவா பசுபதி அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        