மலையகத்தில் அழிக்கப்படும் காடுகள் : ஏற்படவுள்ள அபாயம்
மலையகப்பகுதியில் பற்றைக்காடுகளுக்கும் வனப்பாதுகாப்பு பிரதேசங்களுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் 10 ம் திகதி ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் பற்றைக்காட்டுக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் பற்றைக்காட்டு பிரதேச எரிந்து நாசமாகியுள்ளன.
தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கப்படுவதனால் காட்டில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளதுடன் கொடிய விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிரினங்களும் பொது மக்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்
மலையகப்பகுதியில் வெப்பம் உச்சம் தொட்டுள்ள நிலையில் காடுகளுக்கு தீ வைப்பதனால் வெப்பம் மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் அறிய வகை தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அழிந்து போவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த உரிய அதிகாரிகள் கவனமெடுத்து காடுகளுக்கு தீ வைப்பவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் பொழுது போக்குக்காகவும்,நிலங்களை அபகரிப்பதற்காகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.