விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகாவினர் இடையூறு! செல்வராசா கஜேந்திரன்
“வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகாவினர் இடையூறாக இருக்கின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு தெரியப்படுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவிக்க இருக்கின்றேன்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நா்ாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிரமோட்டை கிராம மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தமை தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் கோரிக்கை
“வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு கடந்த 8 ஆம் திகதி அப்பகுதி மக்களின் வேண்டுகோளிற்கிணங்க அங்கு சென்றிருந்தேன்.
மீளக்குடியமர்த்தப்பட்ட 40 குடும்பங்கள் அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிரதேச செயலகத்தினாலே காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அக் காணிகளை துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகா திணைக்களத்தினர் இடையூறாக இருந்து வருகின்றனர். பலரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
விவசாயம்
நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்திருக்கின்ற போது விவசாயத்தினை ஊக்குவிப்பதாக விவசாய அமைச்சு கூறிக்கொண்டிருக்கின்ற நிலைமையில் இந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக வனப்பகுதியை துப்பரவு செய்ய முனைகின்ற போது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கபடுகிறார்கள்.
குறித்த பகுதியில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்து விட்டாலும் அடிப்படை வசதிகள் எதுவும் பெற்றுக் கொள்ளபடவில்லை. ஒழுங்கான வீதிகள் இல்லை. சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. அங்கே பேருந்துகள் சென்று வந்தன தற்போது ஒழுங்கற்ற வீதியாக இருப்பதனால் பேருந்துகள் வருவது நிறுத்திவிடப்பட்டுள்ளன.
மிக மோசமாக யானை நடமாட்டம் உள்ள இடமாக இருக்கிறது. பாடசாலை செல்லும் மாணவர்கள் 5 கிலோமீட்டர்களுக்கு கால்நடையாக சென்று பின்னர் பேருந்தில் ஏறி பாடசாலைக்கு செல்ல வேண்டிய துரதிஷ்டவசமான சூழல் காணப்படுகின்றது. சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினை இருக்கிறது.
மீள குடியேறியிருப்பவர்கள் பலர் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னர் திரும்பியவர்கள் தான் அங்கே இன்னல்களை எதிர் நோக்கி கொண்டிருக்கிறார்கள்.
இவ் விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் நேரடியாக பார்வையிட்டு அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி வன இலாகாவினுடைய கெடுபிடிகளை நீக்குமாறு கேட்டிருந்தார்கள். அந்த அடிப்படையிலே அங்கு சென்று ஊடகத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றேன்.
வருகின்ற திங்கட்கிழமை நாடாளுமன்றத்திற்கு சென்ற பிற்பாடு இந்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு தெரியப்படுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கப்பட இருக்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.