நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றம்- பெருமிதம் கொள்ளும் கோட்டாபய அரசாங்கம்
போருக்கு பின்னர் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பெருமித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவுடனான சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட கணிசமான திருத்தங்கள் குறித்தும் அமைச்சர் தூதுவர்களுக்கு விளக்கியுளளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திய சந்திப்பு, பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகளின் பிரச்சினைகள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஆலோசனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்தின்படி எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.



