இலங்கை தேசியக் கொடி பொறித்த கால்மிதி தொடர்பான சர்ச்சைக்குரிய விளம்பரம் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசியக் கொடியுடன் கூடிய கால்மிதி தொடர்பான விளம்பரத்தை தனது இணையத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட வழுக்காத கால்மிதி தொடர்பில் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அதன்படி இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி கால்மிதி மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையின் தேசியக் கொடியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கால்மிதி மற்றும் இதுபோன்ற எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அமேசானில் இந்த தயாரிப்புக்களை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த பணிப்புரையினை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய குறித்த விளம்பரம் உடனடியாக அமேசானின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.